Skip to content
Home » பிரஜ்வல் ஆபாச படங்கள்……. வாக்குகளுக்காக வெளியிடப்பட்டது…… மோடி சொல்கிறார்

பிரஜ்வல் ஆபாச படங்கள்……. வாக்குகளுக்காக வெளியிடப்பட்டது…… மோடி சொல்கிறார்

கர்நாடக மாநிலம் ஹசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. ஆவார். 33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஹசன் தொகுதியில் பா.ஜனதா – ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின. அதுபற்றி கர்நாடக அரசு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டநிலையில் அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.  பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் பரிந்துரையின்பேரில் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.

அதையடுத்து சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் வெளியாகி தேசிய அளவிலான அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  கூட்டணி கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வீடியோக்கள் விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜனதாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக பேசியுள்ளார். அதில், பிரஜ்வலை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளியான ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஜே.டி.எஸ்-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் என்பதை உணர்த்துகிறது. காங்கிரஸ் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் இந்த வீடியோக்களை சேகரித்து, தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வெளியிட்டிருக்கின்றனர். அதுவும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிந்திருந்தால் விமான நிலையத்தில் கண்காணிப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையுமே செய்யவில்லை. மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் விளையாட்டு. இந்த வீடியோக்கள் அவர்களின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற சமயத்தில் எடுக்கப்பட்டவை என்று அவர்களுக்கே தெரியும்.

எந்தக் குற்றவாளியும் தப்பக்கூடாது. இதுபோன்ற விளையாட்டுகள் நாட்டில் நிறுத்தப்பட வேண்டும். பா.ஜ.க மற்றும் அரசியல் சாசனத்தை பொறுத்தவரை, இத்தகைய நபர்களுக்கு எதிராகத் துளியும் சகிப்புத் தன்மை இருக்கக் கூடாது. அதுவே என்னுடைய கருத்தும். அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். மல்யுத்த  வீராங்கனைகளுடன் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் கரனுக்கு பா.ஜ.க. சமீபத்தில் சீட்டு வழங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதற்கு ஆதரவு தெரிவித்தார். பிரிஜ் பூஷண் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, எனவே அவரது மகனுக்கு சீட் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!