Skip to content
Home » வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை துவம்சம் செய்தது. இன்னும் அந்த வடு மறையாத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதன் காரணமாக தமிழ்நாட்டில் 18-ந்தேதியில் இருந்து 20-ந் தேதி வரையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், அதன்பிறகும் மழை தொடருவதற்கான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பெரிய அளவுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!