சொத்து பிரச்னை காரணமாக பெங்களூரு எலஹங்கா பங்களாவிற்கு சென்ற சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் தாயார் விஜயலட்சுமியை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனான முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்னை நீடிக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய ஷர்மிளா, ஐதராபாத் சென்று காங்கிரசில் இணைந்தார். மேலும் எலஹங்கா பங்களா தனது மாமியார் பெயரில் உள்ளதாக ஜெகன் கூறுகிறார். ஆனால் பூர்வீக சொத்தில் பங்கு உள்ளதாக ஷர்மிளா வலியுறுத்தி வருகிறார். தனது மகள் அஞ்சலிக்கும், ரகுராமி ரெட்டிக்கும் அக்டோபர் 25ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், எலஹங்கா பங்களாவில் திருமண வரவேற்பை நடத்த ஷர்மிளா அனுமதி கேட்டார். ஆனால், தனது குடும்ப பாதுகாப்பு கருதி ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
தற்போது அங்கு ஜெகனின் மனைவி பாரதி மற்றும் மகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஷர்மிளா மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு வந்தனர். எலஹங்கா பங்களாவிற்கு செல்ல முயன்ற அவர்களை, நீதிமன்ற இடைக்கால தடையை சுட்டிக்காட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். பங்களா மேலாளர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சுமார் 20 நிமிடங்கள் போலீசாருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஷர்மிளா கூறும்போது, ‘இது எங்கள் குடும்ப சொத்து என்பதால் அங்கு செல்ல எங்களை ஏன் தடுக்கிறார்கள்? நீதிமன்ற உத்தரவு குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதால் இருவரும் அருகிலுள்ள ஓட்டலில் தங்கினர். இந்த சம்பவத்தால் சகோதர, சகோதரி இடையேயான சொத்து மோதல் மீண்டும் பொதுவெளியில் தீவிரமடைந்துள்ளது.
