Skip to content
Home » அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  போர் நடந்து வருகிறது.  இதனால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ  அமெரிக்கா முன்வந்துள்ளது. காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுப்புவதற்காகவும், போர் முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காகவும் 5 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை இரு தரப்பும் மறுத்து உள்ளன.

‘காசாவில் அடுத்து வரும் சில மணி நேரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என எந்தவொரு தரப்பிலிருந்தும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை’ என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சலமா மாரூப் தெரிவித்தார். இதைப்போல எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் தெரிவித்தது. காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அவர் தனது கொலராடோ பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

எனினும் இஸ்ரேல் பயண திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இஸ்ரேல்-காசா இடையே நடந்த 5 போர்களிலும் மிகவும் கொடியதாக மாறியிருக்கும் இந்த போரின் போக்கு மேலும் விரிவடையும் அச்சம் நிலவுவதால் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.

கடந்த 11 நாட்களாக இடைவிடாது நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 9,700-க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறம் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியிலேயே இருக்கும் காசா மக்களின் துயரம் மனசாட்சி உள்ள அனைவரின் இதயத்தையும் உலுக்குவதாக உள்ளது. அங்கு உணவு, நீர், மருந்து, மின்சாரம் என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், ஏவுகணைகளுக்கு இருப்பிடங்களை பறிகொடுத்து உறைவிடமும் இன்றி எந்த நேரத்தில் எது நிகழுமோ? என நொடிக்கு நொடி மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

போரில் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகளிலும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பில் இல்லை. இதனால் காசாவில் உள்ள 4 பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளன. பிற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர்கள் மூலமே உயிர்காக்கும் கருவிகள் இயக்கப்படுகின்றன. ஜெனரேட்டருக்கான எரிபொருள் ஓரிரு நாட்களுக்கே இருப்பு உள்ளதால் அவை தீர்ந்துவிட்டால் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக் கணக்கான நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்தன.

இதைப்போல பிணங்களை கையாள முடியாமல் தவித்து வருவதாக ஐ.நா. அகதிகள் நிறுவனமும் கவலை வெளியிட்டு உள்ளது. பிணங்களை வைக்கும் பைகளுக்கே தட்டுப்பாடு இருப்பதாகவும், மொத்தமாக சரிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மைய கமிஷனர் பிலிப் லாசரினி கிழக்கு ஜெருசலேமில் தெரிவித்தார்.

இஸ்ரேலின் அறிவிப்பை தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். காசாவின் மக்கள் தொகையில் பாதி அளவிலான அவர்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் ஐ.நா. அகதிகள் முகாம்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேநேரம்   பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி வரும் ஹமாஸ், காசா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தி உள்ளது.  மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக சாலைகளில் தடுப்புகளை போட்டு  ஹமாஸ் தடுத்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை கூண்டோடு அழிப்பதற்காகவும், இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்பதற்காகவும் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைய தயாராகி வருகிறது. ஆயிரக்கணக்கில் காசா எல்லையில் குவிந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் தாக்குதலுக்கு ஒத்திகை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக விமானப்படையும் உள்ளது. அதேநேரம் அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் இஸ்ரேல் ராணுவத்துக்கு துணையாக நிறுத்தப்பட்டு உள்ளன. வான், கடல், தரை என மும்முனை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். லெபனான் எல்லையில் இருந்து ராக்கெட்டுகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடுத்தது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். கடந்த 14-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 லெபனானியர்கள் உயிரிழந்ததற்கு எச்சரிக்கையாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும், முழுமையான போரில் ஈடுபடும் திட்டமில்லை என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளது.

காசாவில் உள்ள விண்னை முட்டும் அளவிலான கட்டிடங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளும், பற்றி எரியும் கட்டிடங்களுமாக காசா நகர் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மையங்கள், பீரங்கிகள் போன்றவற்றை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. மறுபுறம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் தாக்குதலை நீடித்து வருகின்றனர். இது அங்கும் பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!