அவிநாசி ரோட்டில் பைக் வீலிங் சாகசம்: ‘இன்ஸ்டா ரீல்ஸ்’ மோகத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது! பைக் பறிமுதல்!
கோவை, பேரூர் காளம்பாளையம் சிறுவாணி மெயின் ரோடு தீத்திப்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
கடந்த 27-ந் தேதி இரவு 10 மணி அளவில், வாகனப் போக்குவரத்து நிறைந்த கோவை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் முதல் ஜி.ஆர்.டி – கோல்ட்வின்ஸ் வரை தனது இருசக்கர வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டிச் சென்று உள்ளார். போக்குவரத்து விதிகளை சிறிதும்

மதிக்காமல், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கின் முன்பக்க சக்கரத்தை அந்தரத்தில் தூக்கி ஆபத்தான ‘வீலிங்’ சாகசங்களைச் செய்து உள்ளார். மேலும் இதனை வீடியோவாகப் பதிவு செய்து, ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பீளமேடு சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். வாகனப் பதிவு எண் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்திய போலீசார், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய ரஞ்சித் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
