திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவநிலை மாற்றம், கடும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட ரொக்க குத்தகை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்கு வந்த குடிநீர் கருப்பு நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தத் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்தினாலும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் தொட்டி முறையாகச் சுத்தம் செய்யப்படாததன் காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா குடிநீர் கருப்பு நிறத்தில் வந்துள்ளது என்பதை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடிநீர் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்றும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
