Skip to content
Home » மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

  • by Senthil

நாகை மாவட்டம், மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை அறிந்து, உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது என அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்தனர். பின்னர், இளைஞரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் கடந்த திங்கள்கிழமை பிரித்தெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, இதயமும், நுரையீரலும் சென்னை மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இரு சிறுநீரகங்களில் ஒன்று தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், தோல் மதுரை மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இந்த உறுப்பு தானம் மூலம் 6 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் கூறுகையில்…தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 11 மாதங்களில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்படுவது இது 5-வது முறையாகும். இதுவரை இந்த மருத்துவமனையில் 8 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொடையாளிகளிடம் இருந்தும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்தும் பெறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து மொத்தம் 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டதன் மூலம், 25 பேருக்கு வாழ்க்கை கிடைத்துள்ளது என்றார் அவர். இந்த உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு நிபுணர்களான ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ச. மருதுதுரை, மயக்கவியல் துறை பேராசிரியர் சாந்தி பால்ராஜ், மயக்கவியல் துறை இணைப் பேராசிரியர் லியோ, சிறுநீரக மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர்கள் ராஜ்குமார், சந்திரசேகர், அசோக், ஆகியோரை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!