உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து வெற்றிபெறும் கட்டாயத்தில் இறங்கிய இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். இந்த சூழலில் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அணிக்கான 2-வது கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 மற்றும் 93+11 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றி முட்டுக் கட்டை போட்டார். இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜெண்டினா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ வீணடித்தது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
அடுத்ததாக நடந்த இன்னொரு கால் இறுதிபோட்டியில் பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது.
பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் கால்இறுதியோடு மூட்டையை கட்டியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.