கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம்,
ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும், சஞ்சய், விஷால் என இரண்டு மகன்கள் உள்ளனர். சந்திர பிரபா குளித்தலை மாரியம்மன் கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மகன்கள் இருவரும் இன்ஜினியராக உள்ளனர். நாராயணன் கடந்த 1988 ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் வீரராக சேர்ந்தார். இவர் மேற்குவங்க மாநிலம் மால்டா செட்டர் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நாராயணன் உடல் விமான மூலம் கோயம்புத்தூர் வந்தது.
இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து எல்லை பாதுகாப்பு படை வாகனத்தில் எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் சைலேந்திர குமார் பாண்டே தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் அவரது உடலை
குளித்தலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நாராயணன் உடல் குளித்தலை சுங்ககேட்டில் இருந்து ஊர்வலமாக அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு
உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதில; குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நாராயணன் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் சிஎஸ்ஐ
கல்லறை தோட்டத்தில் சிஎஸ்ஐ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் அடுத்த மாதம் 28 ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தநிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் .