Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்

தாராபுரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீடுபுகுந்து நகைகளை கொள்ளை அடித்த பனியன் தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறநகர் பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக அடுத்தடுத்து 2 வீடுகளில் தங்க நகை கொள்ளை போனது. இதே போல, சில வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடைபெற்றது.

தாராபுரம் கண்ணன் நகரில் வசித்து வரும் மாலிக், பர்வீன் பானு தம்பதி, கடந்த ஜூன் மாதம் இவர்கள் வீட்டில் இல்லாத போது மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதே போல, கொண்டரசன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயியான குழந்தைவேலு என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஆறே முக்கால் பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட போதும், கொள்ளை சம்பவத்தில் பீரோவிற்கு கள்ளச்சாவி போட்டு திறந்ததும், மற்றொரு வீட்டில் பீரோ மீது வைத்திருந்த சாவியை பயன்படுத்தி கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில் தாராபுரம் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்ஐ செந்தில்குமார் கார்த்திக், மதியழகன், மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன் சிக்னல்கள், சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தாராபுரம் கண்ணன் நகர் முகமது அர்ஷத் (19), கொண்டரசம்பாளையம் சக்தி நகரரை சேர்ந்த தரணிதரன் (18) ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். நண்பர்களான இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றியதோடு, நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகளை கண்காணித்து, அதில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததும், பர்வீன் பானு மற்றும் குழந்தைவேலு இருவர் வீட்டில் திருடிய நகைகளை தங்க கட்டிகளாக உருக்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.37 லட்சம் மதிப்புள்ள 294 கிராம் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!