Skip to content
Home » திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

திருச்சி, திருவாரூரில் போக்குவரத்து பெரும் பாதிப்பு….. பஸ் ஸ்டிரைக் நிலவரம்

  • by Senthil

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அதிமுக,  சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.  இதனால்  ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில்  50 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. அதே நேரத்தில்  அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் 93 .3% பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சுமார் 30 சதவீத பஸ்களே இயக்கப்படுகிறது.  கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. நகரப்புறங்களிலும் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 53 பேருந்துகள் உள்ளது. இதில் நேற்று வெளியில் சென்ற 8 பேருந்துகள் பணிமனைக்கு திரும்ப வரவில்லை என்றும் தற்பொழுது பணிமனையில் இருந்த 45 பேருந்துகளில் காலை 6 மணி நிலவரப்படி 6 பேருந்து மட்டுமே பணி மனையை விட்டு போக்கு வரத்திற்கு வெளியில் சென்றுள்ளது. சத்திரம்  பஸ் நிலையத்தில் இருந்து  முசிறி மார்க்கத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் பெருமளவில் இன்று இயங்கவில்லை.

நாகையில் 85% பஸ்கள் இயக்கப்படுகிறது.  ஆனாலும்  பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. பஸ் ஸ்டிரைக் என்பதை அறிந்து இன்று மக்கள்  பயணங்களை தவிர்த்துள்ளனர்.  அதே நேரத்தில் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள்  பஸ் நிலையத்தில் பெருமளவில் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும்  வழக்கம் போல பயணித்தனர்.  மாணவ, மாணவிகள் கூறும்போது  சில பஸ்கள் தாமதமாக வந்ததால்  தாமதமாக  செல்கிறோம் என வருத்தத்துடன் கூறினர்.

நாகை பணிமனையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு புறப்படும் 52 பேருந்துகளில் 32 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுபோக நாகையில் இருந்து திருச்சி, பழனி, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுவதால் வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணிக்கின்றனர். பேருந்துகள் பெரும்பான்மையாக இயக்கப்பட்டாலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கூட்டம் நாகை பேருந்து நிலையத்தில் குறைவாகவே காணப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 239 பஸ்கள்  தினசரி இயக்கப்படும். ஆனால் இன்று 100 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 60 %  பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் காலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.  புதுக்கோட்டை  மாவட்டத்தில் காலை 6 மணிக்கு 70 % பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், 10 மணி அளவில் அனைத்து பஸ்களும் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில் இருந்து சுமார் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மீதம் 40% பேருந்துகள் இயங்கவில்லை,அனைத்து  பணிமனை முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஓட்டுனர்கள் இல்லாத பேருந்துகளுக்கு தற்காலிக பயிற்சி ஓட்டுநர் அமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் சொந்த மாவட்டமான அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து  கழக பணி மனையில் இருந்து  வழக்கமாக இயக்கப்படும் 72 பேருந்துகளில் 23 நகர பேருந்துகள் மற்றும் 45 மப்சல் பேருந்துகள் என 68 பேருந்துகள்  இன்று இயக்கப்படுகின்றது.
பொதுமக்கள் வழக்கம்போல் பேருந்துகளில் ஏறி தங்களது பணிகளுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சென்று வருகின்றனர். அரியலூர் டெப்போவில் இருந்தும் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து  100% பஸ்கள் இயக்கப்பட்டது.  இதனால்  பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் திருச்சியில் இருந்து அங்கு செல்லும் பஸ்கள்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 137 பேருந்துகளில் தற்போது வரை 95 சதவிகித பேருந்துகள் இயகக்ப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு போக்குவரத்து பணிமனைகளிலும் நகரப் பேருந்து, புறநகரப் பேருந்து என 137 அரசு பேருந்துகள் உள்ளன. இதில், மயிலாடுதுறையில் 70 பேருந்துகளும்,சீர்காழியில் 41 பேருந்துகளும், பொறையாரில் 26 பேருந்துகளும் உள்ளன.

இதில் மயிலாடுதுறை பணிமனையில் இருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் தற்போது காலை 7 மணிவரை செல்லவேண்டிய 59 பேருந்துகளில் 52 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், பொறையார், சீர்காழி பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. காலை 10மணிவரை சராசரியாக 95 சதவீத பேருந்துகள் இயக்கபட்டு உள்ளது. மேலும் ஆனைத்து பேருந்துகளும் இயக்கபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் தான் பஸ் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டது.  அதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 100%,  மயிலாடுதுறை, அரியலூரில் 95% பஸ்களும் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 93.90% பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பஸ்கள் 95.2

அதே நேரத்தில் அரசு அளித்துள்ள தகவல்களிள்படி, நெல்லை மண்டலத்தில் 70 முதல் 80% பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை கோட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில் உள்ள  ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பணிமனைகளில் இருந்து 100% பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. 158 புறநகர் பஸ்கள், 71 நகர் பஸ்கள் என மொத்தம் 229 பஸ்களில்  200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

உளுந்தூர்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் வருகை குறைவால் உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திருப்பூர்  மாவட்டத்தில் நகர பஸ்களில் 90 சதவீதமும், புறநகர் பஸ்களில் 80 சதவீதமும் இயக்கப்படுகின்றன.

பஸ் ஸ்டிரைக் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பஸ் ஸ்டிரைக்கை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று   விசாரணைக்கு வந்தது.  வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கவேண்டும் என அரசு  வழக்கறிஞர்  கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி  வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!