Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர் அருகே மனைவி-குழந்தைகள் கண்முன்னே வியாபாரி கொலை

திருவாரூர் அருகே இன்று அதிகாலை 4 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து செங்கல் வியாபாரியை அவரது மனைவி, குழந்தைகள் கண் முன்பு வெட்டி படுகொலை செய்தது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தைச் சேர்ந்தவர் திருமுகம்(50). செங்கல் சூளையில் செங்கல்லை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தார். இவர் நேற்றிரவு மனைவி சுதா(45), மகன் சுமன்(15), மகள் யாழினி(13) ஆகியோருடன் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் பூட்டியிருந்த கதவை ஆயுதங்களால் உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர்.

இந்த சத்தம் கேட்டு கண்விழித்து எழுந்து வந்த திருமுகம், சுதா மர்ம நபர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அதற்குள் 4 பேரும் அரிவாளால் திருமுகத்தை வெட்ட முயன்றனர். இதை தடுத்த சுதாவின் இடது கையில் வெட்டு விழுந்தது. இதைபார்த்து கண்விழித்த மகன், மகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மர்மநபர்கள் மனைவி, குழந்தைகள் கண் முன்பு அரிவாளால் திருமுகத்தின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டி சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த திருமுகம் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுதா அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருமுகம் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், சுதா சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமுகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள் புதுக்குடியில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமுகம் செங்கல் வியாபாரி என்பதால் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா என போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதாக என சோதனையிட்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர். செங்கல் வியாபாரி வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!