கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்

நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் 265 மாணவர்கள், 236 மாணவிகள் என மொத்தம் 501 மாணவ, மாணவிகளுக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், பள்ளியில் பணியாற்றும் 33 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கேக்குகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசன்னா ராமசாமி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 875 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 83 ஆயிரத்து 97 பேருக்கு கேக்குகள் வழங்கப்பட்டு குழந்தைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
