Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு விளிம்பில் தொங்கியதால் அப்பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ( 16 வயது சிறுவன்) ஒருவன், தனது நண்பர்கள் ஐந்து பேருடன் காரில் தில்லை நகர் பகுதிக்கு சென்றுள்ளார். தில்லைநகர் பகுதிக்குச் சென்ற அவர்கள், பின்னர் அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை அந்தச் சிறுவனே ஓட்டியுள்ளார். மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, தனக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. அதோடு நிற்காமல், மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருந்த இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.
இதில், மேம்பாலத்தின் விளிம்பில் கார் ஆபத்தான முறையில் தொங்கி நின்றது. காரின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் , உடனடியாக விரைந்து காரில் சிக்கியிருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
ஆனால், கார் விபத்துக்குள்ளானதை உணர்ந்தவுடன், காரை ஓட்டிவந்த சிறுவனைத் தவிர அவருடன் வந்த 5 நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த விபத்தில், கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக காரில் பயணித்த சிறுவர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், விபத்துக்குள்ளான காரை மீட்டதுடன், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை இயக்கிய சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக் காரணமாக அண்ணாமலை நகர் மேம்பாலப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாகச் செல்கின்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 (ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற விதிகள் தமிழக போக்குவரத்து காவல்துறையால் கடுமையாக கடைபிடிக்கப்படாததால் மாணவர்கள், சிறுவர்கள் வாகனங்களை இயக்கி பெரும் விபத்துகளை ஏற்படுத்துவது தொடர்கிறது.

error: Content is protected !!