Skip to content
Home » முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு  அனுப்பினர்.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு சீறிக்கொண்டு புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் பயண திட்டம் 10 கட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டங்கள் முதற்கட்டமாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், உந்தப்பட்டு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. பூமிக்கு அருகே 170 கி.மீ. தூரத்திலும், தொலைவில் 36 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இவ்வாறு விண்கலத்தை சுற்ற வைக்கப்பட்டது 2-வது கட்டம். பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், அதை வெகுதூரத்தில் உள்ள நிலவு நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதுதான் 3-வது கட்டம். கடந்த 1-ந்தேதி தொடங்கிய 3-வது கட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சம ஈர்ப்பு விசைப்புள்ளி பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், சரிசமமாக இருக்கும் சம ஈர்ப்பு விசைப்புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதுதான் 4-வது கட்டம் ஆகும். இந்த பணி எளிதானது அல்ல என்றாலும், துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், சம ஈர்ப்பு விசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறி செல்லும் வாய்ப்பு இருந்தது. அதனால், அந்த பிசிறுகளை சரிசெய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பணிகள் 5-வது கட்டத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம ஈர்ப்பு விசை புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலம் கொண்டுவரப்பட்டது. இதுவரை சந்திராயன் 3 விண்கலம் பயணத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறது.

சம ஈர்ப்பு விசை புள்ளிக்கு  கொண்டு வரப்பட்ட சந்திராயன் 3  விண்கலத்தை, அங்கிருந்து உந்து விசை கொடுத்து  தள்ளிவிட்டால், புவி ஈர்ப்பு விசை பிடியில் இருந்து, நிலவு ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 சென்றுவிடும். இதுதான் 6-வது கட்டம். இந்த பணிகள்தான் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு நடக்க இருக்கிறது. 21 நாட்களுக்கு பிறகு, 6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. விண்வெளிபயணத்தின் முக்கியமான கட்டம் இது.

இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது. அவை சரியாக நடக்க வேண்டும். இதை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் வந்தவுடன், நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கும். இதுதான் 7-வது கட்டம். அடுத்து, விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து, நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு விண்கலத்தை கொண்டுவந்து நிறுத்த வேண்டும். இது 8-வது கட்டம். சந்திரயான்-3 விண்கலத்தின் உள்ளே உந்துகலம் (புரோபல்சன் மோடுலே) தரையிறங்கி கலம் (லேண்டர்) என்ற 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இதில், லேண்டர் உள்ளே ரோவர் கருவி இருக்கிறது.

விண்கலத்தை அப்படியே நிலவில் தரையிறக்க முடியாது. முதலில், விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும்.  அவ்வாறு பிரித்து, லேண்டரை அதிகபட்சம் 100 கி.மீ. முதல் குறைந்தபட்சம் 30 கி.மீ. வரை நீள்வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அதன்பிறகு கடும் சவாலான 9-வது கட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் இம்மாதம் 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நடக்க இருக்கிறது. அதாவது, லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது இந்த இடத்தில்தான். எனவே, சந்திரயான்-3-ஐ பத்திரமாக தரையிறக்க லேண்டரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறை பாதுகாப்பாக லேண்டரை தரையிறக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆய்வு பணியில் ரோவர் லேண்டர் தரையிறங்கியதும், அதில் உள்ள 4 சுவர்களில் ஒன்று, சாய்வுப் பலகைப் போல திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த வழியாக, லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம். அதன்பின்னர், ரோவர் தனது ஆய்வு பணியை தொடங்கும். இத்தனை பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும். தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெறும்.

அடுத்து, 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ரோபோக்களையும் அனுப்பி சோதனை செய்ய திட்டம் வகுத்துள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெற்றால், இந்தியாவும் சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இப்போது, பூமியில் இருந்து நிலவைப் பார்ப்பதுபோல், அப்போது நிலவில் இருந்து பூமியை பார்க்க முடியும். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் புதிய வழி பிறக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!