Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

சந்திரயான்-3′ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இறுதிக்கட்ட செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். 5.30 மணியில் இருந்து லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியது. அப்போது, நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் ‘லேண்டர்’ சென்றது. பின்னர் சரியாக 6.04 மணிக்கு லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. இதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று விட்டது என்று அவர் கூறினார். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய போது, அதை கண்காணித்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகமடைந்தனர்.
இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த 3வது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதன்மூலம் ஒட்டு மொத்த இந்திய மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவின் தென் பகுதியை படமெடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பும். 14 நாட்கள் ரோவர் ஆய்வில் ஈடுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!