Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் குழப்பங்கள்-குமுறும் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செப்டம்பர் 17ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆனால் இந்த குடமுழுக்கு விழாவில் அழைப்பிதழ் தொடங்கி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு வரை சர்ச்சைகள்தான் அதிகம்.

குடமுழுக்கைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், 1,000 சிறப்பு பேருந்துகள், 72 வாகன நிறுத்துமிடங்கள், 54 மருத்துவ முகாம்கள், 50 ஆம்புலன்ஸ்கள், 53 இடங்களில் எல்.இ.டி. திரைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வளவு பெரிய ஏற்பாடுகளுக்கு மத்தியில், குடமுழுக்கைக் காண வந்த பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் ஆவேசமடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை சுற்றிய சர்ச்சை இன்று காலையில் தொடங்கியது அல்ல. அழைப்பிதழ் அச்சிடப்பட்டதில் தொடங்கி, அறங்காவலர்கள் புறக்கணிப்பு, அரசியல் தலையீடு குற்றச்சாட்டு, பாஸ் விநியோகம், தமிழில் வேள்வி, தமிழ் ஓதுவார்கள் போராட்டம் என குடமுழுக்கு நெருங்க நெருங்க ஒவ்வொரு சர்ச்சையாக வெடித்தது.Home

இன்று காலை குடமுழுக்கைக் காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி பக்தர்கள் குவிந்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி வீதிகள், மாசி வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்துக்கு முழுவதுமாக காவல்துறையினர் தடை விதித்தனர்.

குடமுழுக்கு நேரத்தில் கோவிலுக்குள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைக்காத பொதுமக்கள் பலர் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி பொதுமக்களில் ஒரு பகுதியினர் ஆவேசமடைந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் நிர்மல் குமாரைப் பார்த்த சில பெண்கள், “உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்” என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் “காரில் வர்றவங்க மட்டும்தான் மனுஷங்களா?” என்றும் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆனால் அரசு தரப்பில் இதற்கு வேறு விளக்கம் அளிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாஸ் இருந்தால்தான் அனுமதிப்பீங்களா? தடுப்புகளைத் தள்ளிய மக்கள்
பொதுமக்களின் அதிருப்தி கோஷத்துடன் மட்டும் நிற்கவில்லை. மேற்கு வாசல் பகுதியில் பெருமளவில் மக்கள் திரண்ட நிலையில், சிறப்பு அனுமதி அட்டை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் போலீசாரின் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு முன்னேறினர். சிலர் தடுப்புகளைத் தாண்டிச் செல்லவும் முயன்றனர். பக்தர்கள் சிலர் கீழே விழுந்தனர்.

ஆனால், “காலை 10 மணிக்குப் பிறகே பொதுமக்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலையில் கூட்ட நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது” என்று அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால் காலை 10 மணி வரை காத்திருக்காமல் 8.30 மணி முதலே பொதுமக்களைப் படிப்படியாக அனுமதிக்கத் தொடங்கியதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குடமுழுக்கு சடங்குகளை கோவிலுக்குள் இருந்து நேரடியாக செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுமண்டபத்தில் இருந்து நேரலை ஒளிபரப்பை பார்த்தே செய்தி சேகரிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

கோவிலைச் சுற்றிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் பெருமளவில் மக்கள் கூடுவதற்கு போலீசார் தடை விதித்தனர். அருகிலுள்ள வீடுகளில் வெளியாட்கள் தங்கியிருக்கிறார்களா என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோவில் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 36 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. இதுவும் சர்ச்சையானது.

குடமுழுக்கு முடிந்தபின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படவில்லை என்று போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தண்ணீரை பக்தர்கள் மீது தெளித்தபோது, “இது குடமுழுக்கு புனித நீர் இல்லை; சாதாரண குடிநீர்தான்” என்று சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹோட்டலில் ஓதுவார்கள் சிறை வைப்பு?
குடமுழுக்கு நாளான இன்று தமிழ் ஓதுவார்களை கோவிலுக்கு அழைத்துச் செல்லாமல், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தடுத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குடமுழுக்கின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க விடாமல் தங்களை முடக்கியதாக ஓதுவார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய பொதுமக்கள் எதிர்ப்புக்கு பல நாட்களுக்கு முன்பே குடமுழுக்கு தொடர்பான முதல் பெரிய சர்ச்சை வெடித்திருந்தது. குடமுழுக்கு விழாவுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களின் தனிப்பட்ட பெயர்கள் இடம்பெறவில்லை.

அதற்குப் பதிலாக பொதுவாக “அறங்காவலர்கள் குழு” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறங்காவலர்களின் பெயர்கள் ஏன் அழைப்பிதழில் இடம்பெறவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் அவர்களது பெயர்கள் விடுபட்டன? என்று கேள்வி எழுப்பியது.

இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்களின் பெயர்களை நீக்கியது கோவிலின் செயல் அலுவலர்தான் என்று அறநிலையத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அழைப்பிதழில் தனித்தனியாக அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. கோவில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமானது அல்ல; அழைப்பிதழில் “அறங்காவலர்கள் குழு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது; எனவே இதனை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்பது அமைச்சர்கள் தரப்பின் நிலைப்பாடாக இருந்தது.

ஒருவழியாக, “குடமுழுக்குக்குப் பிறகு நிறுவப்படும் கல்வெட்டில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும்” என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெறாதது மட்டுமின்றி, முதலில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் பல்வேறு பிழைகள் இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது.

குறிப்பாக, திருப்பனந்தாள் காசி மடத்தின் 21-வது அதிபராக இருந்த ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் 2025 ஆகஸ்ட் மாதமே மறைந்துவிட்ட நிலையில், அவரது பெயர் குடமுழுக்கு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்” என்ற பெயரும் தவறாக அச்சிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இறந்தவரின் பெயரைக்கூட நீக்காமல் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டதாக விமர்சித்தார். இந்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய அழைப்பிதழ் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குடமுழுக்கு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது குடமுழுக்கு ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். விழா ஏற்பாடுகள் தொடர்பாக அறங்காவலர்களுடன் முறையாக ஆலோசிக்கப்படவில்லை; அறங்காவலர் குழுவுக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை; அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதா என்பதுகூட அறங்காவலர்களுக்குத் தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக அறங்காவலர் குழு சார்பில் பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் நிலை என்ன என்பது தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

ஆனால் ருக்மணி பழனிவேல் ராஜனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்தார். ”குடமுழுக்கு பணிகளில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை; மக்கள் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது” என்றார் அமைச்சர் நிர்மல்குமார்.

குடமுழுக்கு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவை என்றும், அறங்காவலர் குழுவினரைத் தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஸில் வெடித்த ”பஞ்சாயத்து”
அறங்காவலர் குழுத் தலைவர் எழுப்பிய மற்றொரு முக்கியப் பிரச்சினை அனுமதி அட்டைகள். குடமுழுக்குக்காக எத்தனை பாஸ்கள் வழங்கப்படுகின்றன என்பதில்கூட தெளிவில்லை என்று ருக்மணி பழனிவேல்ராஜன் குற்றம்சாட்டினார். ஒரு நேரத்தில் 9 ஆயிரம் பாஸ் என்றும், மற்றொரு நேரத்தில் 11 ஆயிரம் பாஸ் என்றும் வெவ்வேறு தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார்.

நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாஸ் மற்றும் அழைப்பிதழ்கள் முறையாக வழங்கப்பட்டனவா என்ற கேள்வியையும் ருக்மணி பழனிவேல்ராஜன் எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “பாஸ் விஷயத்தில் நாங்கள் எந்தத் தலையீடும் செய்யவில்லை. பாஸை கண்ணில்கூட பார்க்கவில்லை” என்று தெரிவித்தார். பாஸ் விநியோகம் கோவில் நிர்வாகம் சார்ந்தது; அமைச்சர்கள் அதில் தலையிடவில்லை என்பதே அவரது விளக்கம்.

பக்தர்களை வெவ்வேறு வழிகளில் அழைத்துச் செல்வதற்காக 7 வண்ணங்களில் அனுமதி அட்டைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் விழா நாளான இன்று பொதுமக்கள் அனுமதி தொடர்பாக எழுந்த எதிர்ப்பு, பாஸ் விவகாரத்தை மீண்டும் சர்ச்சையின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

இதற்கிடையே குடமுழுக்கில் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் இடம் குறித்தும் சர்ச்சை எழுந்தது. யாகசாலை, கருவறை, கோபுர விமானம் உள்ளிட்ட குடமுழுக்கின் முக்கிய சடங்குகளில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழிலும் மந்திரங்கள், திருமுறைகள் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் யாகம் நடத்தப்படுவது போல தமிழிலும் வேள்வி நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கும் சென்றது. தமிழில் மந்திரங்கள் ஓதுவது தொடர்பான பெரிய சட்ட விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளிலும், தமிழக அரசு அமைத்த குழுவின் பரிசீலனையிலும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், குடமுழுக்கை முன்னிட்டு புதிதாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றது. அதன்பிறகும் விவகாரம் முடிவடையவில்லை.

“ஓதுவார்களை தனியாக தேவாரம் பாட அனுமதிப்பது மட்டுமே தமிழுக்கு சம உரிமை கொடுப்பதாக ஆகாது; சமஸ்கிருத யாகசாலைகளுக்கு இணையாகத் தமிழிலும் வேள்வி நடைபெற வேண்டும்” என்ற கோரிக்கையுடன் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழ் ஓதுவார்கள் போராட்டம்
தமிழ் வழிபாடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, குடமுழுக்குக்கு முந்தைய நாளான செப்டம்பர் 16 அன்று பிரச்சினை கோவில் வாசலுக்கே வந்தது. தமிழ் ஓதுவார்கள் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை; தமிழ் ஓதுவார்களை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை; சமஸ்கிருதம் ஓதுபவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

சேலம் சத்தியபாமா தலைமையில் ஓதுவார்கள் அம்மன் சன்னதி முன்புள்ள சித்திரை வீதியில் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழ் ஓதுவார்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார். குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் நடைபெறும் இடங்களில் தமிழில் பாராயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 27 ஓதுவார்கள் சிறப்பாக மதுரைக்கு அழைத்து வரப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி முதலே பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், “தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறைக்குச் செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு”என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓதுவார்களுக்கு முக்கிய சடங்குகளில் உரிய இடம் கிடைக்கவில்லை என்பது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குற்றச்சாட்டு. தமிழ் ஓதுவார்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; 27 ஓதுவார்கள் ஏற்கெனவே பணியில் உள்ளனர் என்பது அரசின் பதில்.

இப்படியான சர்ச்சைகளுக்கு நடுவேதான் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது.

error: Content is protected !!