Skip to content
Home » வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா செல்லும் வழியில் சென்னை அருகே நிலை கொண்டு சென்னையை மிகக்கடுமையாக பாதிப்புக்கு  உள்ளாக்கியுள்ளது. புயல் காரணமாக பெய்த அதிகனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி மேடான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தொழிற்சாலைகள், நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை முதல் மழை விலகி விட்டபோதிலும் இன்னும் பெரும்பான்மையான பகுதிகளில் தண்ணீர்  முழுவதுமாக வடியவில்லை.

மாநகராட்சி பணியாளர்களும், அதிகாரிகளும் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சிகளில் முனைப்புடன் இயங்கி வருகின்றனர்.  ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையின் கீழ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு  பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பேரிடர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மைய அலுவலகத்திற்கு நேற்று முன் தினம்  நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து நிலைமையைக் கண்காணித்தார்.  நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். அத்துடன் நேற்று நள்ளிரவில் மழை பாதிப்பு பகுதிகளில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு பணிகளை விரைவு படுத்தினார்.

இந்நிலையில் தற்போது மழை விட்டு வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கும் நிலையில் நேரடியாக முதல்வர் ஸ்டாலினும் களத்தில் இறங்கியிருக்கிறார். இன்று காலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  மக்களிடம் நலம் விசாரித்தார்.

அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பல்வேறு பகுதிகளையும் முதல்வர் நேரில் சென்று பார்வைக்கு ஆய்வு செய்கிறார். முதல்வரும் களத்தில் இறங்கி பணியாற்றுவதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த சுறுசுறுப்போடு  பணியாற்றி வெள்ளத்தை  வடிய வைக்கும் வேலையிலும், மக்களை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!