திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, இணையவழி குற்றங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். திருச்சிக்கான பொறுப்பு நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான பூர்னிமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மத்திய அரசின் ‘சுரக்ஷித் பச்பன் அபியான்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2வது குழுவினருக்கான இப்பயிற்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்புகளில், இளம் சிறார் நீதிக்குழு உறுப்பினர் சோபியா ரோஸ்மேரி, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் அவர்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது குறித்து பேசினார்
இன்ஸ்பெக்டர் இசைவாணி, இணையவழி பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்து பேசினார்
தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த தீபா, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து விளக்கம் அளித்தார்
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரபு, பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச சட்ட உதவிகள் பற்றி பேசினார்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீவித்யா,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குழு வழக்கறிஞர் ஷீலாஆகியோர் பல்வேறு சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளுக்கு உகந்த அணுகுமுறைகள், போக்சோ சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் அச்சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கிடைக்கும் சட்டப்பாதுகாப்புகள் குறித்து விளக்கினார். மாவட்ட குற்றவியல் நீதிபதி செந்தில்முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
