டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் மதுபானக் கடைகளை பூட்டி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 142 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
பின்னர் போராட்டக்காரர்கள் துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உதயசங்கர், தொழிற்சங்க பிரதிநிதிகளான முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால், மதுபானம் வாங்க முடியாமல் குடிமக்கள் கடும் அவதியடைந்தனர். எங்காவது கடைகள் திறந்திருக்கும் என பலர் தேடி அலைந்தனர்.
இதற்கிடையில், டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் அதிகாரிகள் மற்றும் மாநில தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையை பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்ட நிலையில், பாரதி தலைமையிலான விற்பனையாளர்கள் சங்கம் ஏற்க மறுத்தது. இதனால் இன்று இரண்டாவது நாளாகவும் திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், மதுபானம் கிடைக்காமல் குடிபிரியர்கள் கடும் அவதியடைந்தனர்.
