தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பருவகால ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி ஆகிய 6 மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
இதில் மாநில செயலாளர் சி.ஜெயபால், மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரரன், மாநில பொருளாளர் ஏழுமலை, தஞ்சை மாவட்ட செயலாளர் எம்.கண்ணன், தஞ்சை மண்டல கவுரவத் தலைவர் பாண்டிதுரை, மண்டல செயல் தலைவர் ஆனந்தபத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், கடந்த 2013-ம் ஆண்டு முதல் பருவகால பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அவர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி பணி நிரந்தர நடவடிக்கைகளை காலவரையின்றி தள்ளிப்போடக் கூடாது. சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
மேலும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நீண்ட காலம் தேக்கி வைக்காமல் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். நெல் மூட்டைகளை கையாளும் பணிகளில் ஏற்படும் இயக்க இழப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதுடன், இழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை எக்காரணம் கொண்டும் சாதாரண நிலையில் பணியாற்றும் ஊழியர்களின் மீது சுமத்தக் கூடாது.
தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகள் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். நீண்டகாலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணி அனுபவத்தையும் தகுதியையும் கருத்தில் கொண்டு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பின்னர் பணி நிரந்தரம், நெல் மூட்டைகள் உடனடி இயக்கம், இயக்க இழப்புகளைக் கட்டுப்படுத்துதல், இழப்பீட்டுத் தொகையை ஊழியர்கள் மீது சுமத்துவதைத் தவிர்த்தல், தகுதியானவர்களுக்கு உடனடி பதவி உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
