Skip to content
Home » தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சி ஐ டி யு  மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ,ஒன்றிய செயலாளர் நல்லுசாமி ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகம் முன் பணி நிரந்தரம்,  எட்டுமணி நேர வேலை, வாரவிடுமுறை,  பண்டிகை கால விடுப்பு,  தினக்கூலியாக ரூ.630 வழங்க வேண்டும், சேமநல நிதி, மருத்துவ வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 70 தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி ,நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் மற்றும்  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  பேச்சு வார்த்தையில்  உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இன்று 3ம் நாளாக  ஸ்டிரைக் நடப்பதால்  முசிறி நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.

துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து நகரை தூய்மையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே நகராட்சி சுகாதாரமற்ற நிலையில், போராட்டம் காரணமாக முசிறி நாற்றமெடுக்க தொடங்கி விட்டதாக முசிறி பொதுமக்கள் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!