Skip to content
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்றும், “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும், “அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள்எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும். இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது.

1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தையும், 1999-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும், 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்தார். அவரது அடியொற்றி நடக்கும் நமது திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது கிறிஸ்தவ மக்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது. அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!