Skip to content
Home » உங்களுக்கு சரியான மரியாதையை அளித்து வருகிறோம்….. கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் “நச்” கடிதம்..

உங்களுக்கு சரியான மரியாதையை அளித்து வருகிறோம்….. கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் “நச்” கடிதம்..

நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்திய இந்த கடிதம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நள்ளிரவில் தனது அறிக்கையை வாபஸ் பெறுவதாக மீண்டும் கடிதம் எழுதினார் கவர்னர் ரவி.. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதியம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் எழுதிய இருந்தார். இதன் முழு விபரம்..  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கடந்த 29ம் தேதி இரவு 7 மணியவில் நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மீண்டும் அன்று இரவு 11.45 மணியளவில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கடிதம் அனுப்பப்பட்டது. உங்களுடைய கடிதம் முழுவதும் புறக்கணிக்கப்பட வேண்டியதாக இருந்தாலும் சட்டம் மற்றும் உண்மை நிலை குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நீக்கம் குறித்து கடிதம் அனுப்பும் முன்பு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவிக்கவும் இல்லை, கருத்துகளை கேட்கவும் இல்லை.

மேலும், உங்களுடைய முதல் கடிதத்தில் அரசியலமைப்பு முறிந்து போகும் என்று கடினமான கருத்துகளை தெரிவித்து, பின்னர் இரண்டாவது கடிதத்தில் அதை திரும்ப பெறுவதாகவும், அட்டர்னி ஜெனரல் கருத்து கேட்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளீர்கள். இது நீங்கள் முக்கியமான முடிவு எடுக்கும் முன்பு சட்ட ரீதியான ஆலோசனையை பெறவில்லை என்பதை காட்டுகிறது. மேலும் உள்துறை அமைச்சரின் தலையீட்டின்படியே இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான ஆலோசனை தேவை என்ற வழிகாட்டுதலை பெற்றிருக்க வேண்டும். இதுவே இந்திய அரசியலமைப்பில் இருந்து சிறிய கருத்தைக் கூட எடுத்துக் கொள்ளாமல் வேகமாக பதற்றத்தில் இந்த முடிவு எடுத்திருப்பதை காட்டுகிறது.

நான், எனது அமைச்சரவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் தன்னம்பிக்கை மற்றும் இறையாண்மை அடிப்படையிலேயே செயல்படுகிறோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்களது வலிமையான சொத்து. எனவே அரசியலமைப்பின் உயர்ந்த பதவியில் இருக்கும் கவர்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு குறித்து அரசியலமைப்பு முறிந்து போகும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். இவை அனைத்தையும் நினைவில் வைத்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து உங்களுடைய புரிதலுக்காக சில பதில்களை கூறுகிறேன்.

கடந்த ஜூன் 1ம் தேதி உங்களுடைய கடிதத்திற்கு பதில் அளிக்கையில் ஒரு நபர், விசாரணையை எதிர் கொள்வதற்கும், ஒரு நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதற்கும், ஒரு நபர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன். உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டில் லில்லி தாமஸ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒரு நபர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியை பறித்து அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இதில் இருந்து தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி நீக்கம் என்பது தெளிவாக தெரிகிறது. உங்கள் கடிதத்தின்படி செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் விசாரணைக்காக கைது மட்டுமே செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை. குற்ற வழக்குகளை சந்திப்பவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா என்பது குறித்து கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மனோஜ் நருலா ஒன்றிய அரசுக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிரதமர் தனது அமைச்சரவையை தேர்ந்தெடுக்கும் போது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாதவரை அமைச்சராக்குவது அவரின் பொறுப்பு. இதையே அரசியல் அமைப்பு பிரதமரிடம் எதிர்பார்க்கிறது. இதே கருத்து மாநில முதல்வர்களுக்கும் பொருந்தும். மேலும் ஒருவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களுக்கு மட்டுமே உண்டு.

இதனால் ஒரு அமைப்பு ஒருவர் மீது விசாரணை மேற்கொண்டால் அவர் அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லை என சட்டப்படி கூறமுடியாது. மேலும் வருமான வரித்துறை சோதனையின் போது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வைத்து செந்தில் பாலாஜி விசாரணையில் தலையிடுவார் என்று கூறுவது ஆதாரமற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பல மாதங்களாக அமைதி காத்து வருகிறீர்கள். குட்கா வழக்குகள் குறித்து சிபிஐயின் குற்றப்பத்திரிகைக்கு அனுமதி கோரியதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள்.

ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 5 பக்க கடிதத்தை அனுப்பியிருக்கிறீர்கள், இது உங்களுடைய ஆரோக்கியமற்ற சார்பு நிலையை காட்டுகிறது. நீங்கள் எடுத்திருக்கும் முடிவு இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. உங்களுடைய முறையற்ற குற்றச்சாட்டுகளுக்கு பின்பும் தமிழ்நாடு அரசு உங்களுக்கும் உங்களது அலுவலகத்திற்கும் சரியான மரியாதையை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் நீங்கள் கூறும் அரசியல் அமைப்புக்கு எதிரான உத்தரவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. மேலும் முதலமைச்சரின் அறிவுரையின்படியே ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் முடியும். ஆளுநருக்கு அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை.

இவை அனைத்தும் முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் மட்டுமே. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்திற்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டியவர்கள். அதனால் மீண்டும் கூறுகிறேன். செந்தில் பாலாஜி உள்பட என்னுடைய அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. என்னுடைய ஆலோசனை இல்லாமல் அமைச்சரை நீக்குவதாக நீங்கள் அனுப்பிய அரசியல் அமைப்புக்கு எதிரான கடிதம் சட்ட ரீதியாக செல்லாது, அது புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

* கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, வழக்கு தொடர அனுமதி கேட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் பல மாதங்களாக அமைதி காத்து வருகிறீர்கள். குட்கா வழக்குகள் குறித்து சிபிஐயின் குற்றப்பத்திரிகைக்கு அனுமதி கோரியதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 5 பக்க கடிதத்தை அனுப்பியிருக்கிறீர்கள், இது உங்கள் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!