Skip to content
Home » இந்தியா கூட்டணிக்கு….வரலாறு காணாத வெற்றியை தாருங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தியா கூட்டணிக்கு….வரலாறு காணாத வெற்றியை தாருங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:

,”இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

▪️ ஜனநாயகத்தையும் – மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் – ஏப்ரல் 19.

▪️ யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, ‘ஊழல் மோடி’ தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

▪️ உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

▪️ தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

▪️ வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

 வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

▪️ தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

▪️ ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!