Skip to content
Home » யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?

பதில்:-கோவிட் இரண்டாவது பேரலை என்கிற மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழக அரசு பொறுப்பேற்றது. மக்களின் உயிரைக்காக்க வேண்டிய மிக சவாலான பணி எங்கள் முன் இருந்தது. அனைத்தையும் சமாளித்து, மீண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டோம்.

அதுபோல தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், அரசின் நிதி நிலைமையும் படுபாதாளத்திற்கு போயிருந்தது. தமிழ்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பே சீரழிந்திருந்தது. இந்த நிலைமைகளை மாற்றி, தமிழகம் மீண்டும் முதன்மை மாநிலமாக வேண்டும் என்கிற எங்கள் லட்சியமும் இலக்கும் சவால்களுடனேயேதான் தொடங்கின. அந்த சவால்களை எதிர்கொண்டு இன்று பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

கேள்வி:- கடந்த மூன்றாண்டுகளில் உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

பதில்: பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களை தமிழகம் பெற்றுள்ளது. மருத்துவக்கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவ தலைநகர்’ என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல கட்டங்கள் முன்னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது.

குனிந்து தேட வேண்டிய அளவில் இருந்த தமிழகத்தின் முன்னேற்றத்தை மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் என்பது வேறெந்த மாடலுடனும் ஒப்பிட இயலாத தனித்துவமான முன்மாதிரியாகும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட மாடலுக்கு எளிமையான விளக்கம்!

கேள்வி: ஜி.எஸ்.டி. நடைமுறை மற்றும் நிதிப்பகிர்வால் உள்ள நெருக்கடிக்கு இடையே எப்படி திட்டங்களைத்தீட்டி செயல்படுத்துகிறீர்கள்?

பதில்: புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பேரிடரை எதிர்கொண்ட நிலையில், பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் பேரிடர் நிவாரண நிதியை இதுவரை வழங்கவில்லை. மிகக்கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கமின்றி செயல்படுகிறோம். மாநில அரசுக்கு கிடைக்கக்கூடிய பத்திரப்பதிவு துறை வருவாய், வாகன பதிவு வருவாய், புதிய முதலீடுகள் உள்ளிட்டவற்றை கொண்டு திட்டங்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றையும் கவனித்து செயல்படுத்துகிறோம்.

கேள்வி: நீங்களும் உங்கள் திராவிட முன்னேற்றக்கழகமும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையமாக இருக்கிறீர்கள். எத்தகைய சவால்கள் உங்கள் முன் உள்ளன?

பதில்: இந்தியா கூட்டணியின் தொடக்க கூட்டத்திலேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகளை கருத்திற்கொண்டு தொகுதிப்பங்கீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். நிதிஷ்குமார் அவர்கள் சொந்த காரணங்களை கருதி வெளியேறினாலும் அவருடைய பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதுடன், அங்கே தொகுதிப்பங்கீடும் சுமுகமான முறையில் நடந்து வருகிறது. அதுபோலவே வாய்ப்புள்ள இடங்களில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தங்களுக்குரிய பங்குடன் செயல்படுகின்றன. தேர்தல் களம் என்று வருகிறபோது ஒரு சில சவால்கள் எல்லாத்தரப்புக்கும் இருக்கும். மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை.

கேள்வி:- கவர்னர் போடும் முட்டுக்கட்டைகளை மீறி தமிழகம் எப்படி தனது அரசியல் கனவுகளை நனவாக்குகிறது?

பதில்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம், நியமன பதவியான கவர்னர்களுக்கு கிடையாது என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அண்மை காலமாக வெளிப்படையான அரசியல்வாதிகளைப்போல கவர்னர்கள் செயல்படுவதை தமிழகம் மட்டுமின்றி, கேரளம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காண்கிறோம். கவர்னரின் அதிகார வரம்புமீறல்களை சட்டமன்றத்தில் எதிர்கொண்டு முறியடித்தோம். நீதிமன்றத்திலும் சட்டவழியில் போராடி கொண்டிருக்கிறோம்.

அரசியல்சட்டத்தை மதிக்காமல், ஜனநாயகத்தின் மாண்புகளை கெடுக்கும் வகையில் கவர்னர்களை வைத்து இணை அரசாங்கம் நடத்த முற்படும் பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

கேள்வி: மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?

பதில்:- ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டி கொள்ள முடியாது. பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

கேள்வி: தேசிய அளவில் நீங்கள் கூட்டணியை கட்டமைப்பதால்தான் பா.ஜனதா அரசு உங்களை குறி வைக்கிறது என கருதுகிறீர்களா?

பதில்:எதிர்ப்புகளோ, தாக்குதல்களோ எனக்கோ தி.மு.க.வுக்கோ புதிதல்ல. எப்போதெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேர்கிறதோ அப்போது எதிர்ப்பு குரல் கொடுக்கும் இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்றக்கழகம். ஆதரிக்க வேண்டிய நல்லவற்றை ஆதரிப்பதிலும் உறுதியாக இருப்பேன். எதிர்க்க வேண்டிய தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!