Skip to content
Home » எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய

சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்!

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து இன்று  தாயகம் திரும்புகிறார். இந்த நிலையில் அவர்  எழுதி உள்ள  மடலில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல்:

சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரி போல இதனை எழுதுகிறேன்.

அடுத்தவர் டைரியைப் படிக்கலாமா என்ற தயக்கம் தேவையில்லை. நாம் யாரும் அடுத்தவர்களல்ல. கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தில் எல்லாரும் கலைஞரின் உடன்பிறப்புகள். அதனால் பயணத்தின் நாட்குறிப்பை உங்களிடம் பதிவிடுகிறேன்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி நேரம் முன்கூட்டியே இருக்கும். அதாவது, உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இப்போது இரவு 10 மணி. கழகத்தின் சார்பிலான பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடி மகிழ்வதற்கான ஆயத்த வேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இயக்கப் பணிகளை முடித்துவிட்டு, குடும்பத்தினர் முகம் கண்டு சற்று மகிழலாம் என்ற நினைப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பீர்கள். உடன்பிறப்புகளாம் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாட்களாகிறது.

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள். அன்பிற்கினிய தமிழ்நாட்டு மக்களும், நெஞ்சிற்கினிய உடன்பிறப்புகளாகிய நீங்களும் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன். தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம். பல ஆயிரம் மைல்கள் கடந்திருந்தாலும் மனது தமிழ்நாட்டையே சுற்றி வந்தது. வெளிநாட்டில் இருந்தாலும், டி.வி. சேனல்கள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகா சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.

சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பானுக்குப் பெயர் உண்டு. நாம் உதயசூரியனின் ஒளியால் விடியல் கண்ட தமிழ்நாட்டுக்காரர்கள். இன்னும் சிறிது நேரத்தில், இங்கே பொழுது புலரும். தாய்த் தமிழ்நாட்டை நோக்கிய பயணம் தொடங்கும். கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறேன்.

தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் – தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு “வருக வருக” என அனைவரையும் அழைத்து, “கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது” என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.

உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.

 

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!