Skip to content
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

  • by Senthil

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன். அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு” என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.

திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்! நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!