Skip to content
Home » கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

  • by Senthil

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி இன்று காலை சென்றிருந்தார்.  அப்போது அவ்வழியில் இருந்த கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவை அவர் பரிசோதித்தார்.

பின்னர் அருகாமையில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்றார்.  அப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரை 27 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஆட்சியர் பள்ளி தொடங்கும் நேரத்திற்கு சென்றபோது பணியில் இருக்கவேண்டிய தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணியில் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஆட்சியர் பழனி, வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்கச் சொல்லிக் கேட்டார்.

பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரியாத தலைமை ஆசிரியை, ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கௌவுசருக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை, ஆசிரியையை  பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தனர்.

அதன்படி கிருஷ்ணகிரியில் பயிற்சியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலருக்கு விசாரணை அறிக்கை மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது. இன்று சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!