Skip to content
Home » கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,266 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் என, 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில், 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான்முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றையதினம் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி

பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நான்முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் கையேடுகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்ததாவது,

12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள். கடந்த ஜீன் மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் பயனாக தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அரியலூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. ஆனாலும் கல்வியில் சமீபகாலமாக முன்னேறி வருவது மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும். கல்வியில் முன்னேற்றம் பெரும் மாநிலங்கள், நாடுகள் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும். அதனப்படையில் அரியலூர் மாவட்டம் கல்வியில் முன்னேறி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளே அதிகமாகும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு சூழலில் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வசதிகளும், காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொண்டதன் காரணமாகத்தான் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் கல்வியின் மீது கொண்ட ஈடுபாடாகும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். அதன் தொடர்ச்சியாக பள்ளி படிப்பு முடித்த மாணாக்கர்கள் கல்லூரி படிப்பையும் பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 24,674 பள்ளி மாணவ மாணவிகளும், 4,298 பொறியியல் மாணவ மாணவிகளும், 5,294 கலை அறிவியல் படித்த மாணவ மாணவிகளும் என மொத்தம் 34,266 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று கல்லூரியில் சேராமல் இருந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களை கல்லூரியில் சேர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் உயர்கல்வி குறித்த விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கும் வகையில்தான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்கள் பொருளதார சூழ்நிலை காரணமாக கல்வி பயில முடியாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகள் வழங்க தமிழக அரசால் ஊக்கவிக்கப்பட்டு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் கல்விக் கடன்கள் குறித்தும், உயர்கல்வி வாய்ப்பு குறித்தும் தெரிந்து கொண்டு தங்களுக்கு விருப்பமுள்ள துறைகளை தேர்வு செய்து கல்லூரி படிப்பை பயில வேண்டும். வாழ்கையில் மாணவர்கள் உயரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மாணவிகள் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் கல்வி கற்று நல்ல வேலைகளில் சேர்ந்து வாழ்கையில் சிறந்த நிலைக்கும் வரவேண்டும். உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருந்தால் கல்வி நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தொலைபேசி வாயிலாக உங்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடமும் நீங்கள் அறிவுரைகளை பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களை போன்று தேர்ச்சி பெற்ற மற்ற அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சியானது அனைத்து அரசு பள்ளிகளிலும், மற்றப் பள்ளிகளிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் நேரலையின் மூலமாக 2500 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களும் உயர்கல்வியியை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் கல்வியில் முன்னேற்றம் பெற முடியும். நீங்கள் கல்வியில் முன்னேற்றம் பெற்றால்தான் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடையும். மேலும் வரும் தலைமுறை மாணவர்களும் நல்ல சூழலில் கல்வி பயில்வார்கள். பெற்றோர்களின் எண்ணத்தின் படி நல்ல உயர்கல்வி பெற வேண்டும். உயர்கல்வி பெற ஆலோசணைகள் பெற முடியவில்லை என்ற நிலை இருக்ககூடாது என்ற நோக்கத்தில்தான் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சந்தேங்களை கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வாய்பினை பயன்படுத்தி கொண்டு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்கையில் முன்னேற்றம் பெற வேண்டும.; மேலும் இன்றையதினம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பேசினார்.

தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு பொன்னாடைப் போற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா அவர்கள் அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வில் பங்கேற்பது குறித்தும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.அஜித்தா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் உயர்கல்விக்கான பாதையை தேர்ந்தெடுப்பது என்ற தலைப்பில் தங்களது கருத்துரைகளை தெரிவித்தனர். அரியலூர் செந்துறையச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் விஜயகோபால் (Air craft engineer) அவர்கள் இலண்டனிலிருந்து நேரலையில் தனது அனுபவங்களையும், அரசின் திட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உயர்கல்விகள்,

வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு உரையாற்றி ஊக்கமளித்தார். அரியலூர் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.செந்தமிழ்செல்வன், அரசு தொழிற்நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழரசன், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ரமேஷ் ஆகியோர் பொறியியல், தொழில்நுட்பவயில், கலை கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமணியன் கல்விக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தார். மஞ்சு, கிரண், எச்.சி.எல் நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலர் ஆம்ப்ரோஸ் ஆகியோர் நான் முதல்வன் திட்டத்தின் பயன்கள் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர். முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு கழகம் (அரியலூர்) செல்வம் நன்றியுரை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!