Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மோதல்- வாலிபருக்கு கத்திக்குத்து..ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியம் கோடியாளம் பகுதியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 26-ஆம் தேதி இரவு இந்த திருவிழாவின் போது அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஊர் மக்கள் முன்னிலையில் சமரசம் பேச முயன்றபோது, ஒரு தரப்பினர் ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் கோடியாளம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (வயது 22), விஸ்வா (வயது 19), பன்னீர்செல்வம் (வயது 32) மற்றும் ஹரிஹரன் (வயது 28) ஆகிய 4 பேரும் சேர்ந்து, குளுமணி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கீர்த்திராஜ் (வயது 28) மற்றும் அவரது தம்பி ரஞ்சித்குமார் (வயது 26) ஆகியோரை ஆபாசமாகத் திட்டி, அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அண்ணன்-தம்பி இருவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உறவினரிடையே மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து – ரவுடி கைது

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா அய்யன்பொருவாய் பாலாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (44). இவருக்கும் இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ‘சாம்பார்’ சுரேஷ் (39) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சுரேஷ் மது போதையில் முருகனின் வீட்டின் அருகே கலாட்டா செய்துள்ளார். இதனை முருகன் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் முருகனுக்கு காயம் ஏற்பட்டது.
தாக்கிய சுரேஷ் மீது ஏற்கனவே வளநாடு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா ஏலூர்ப்பட்டி மாராய்ச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கார்த்திகைப்பட்டி பகுதியில் உள்ள அரசன் தோட்டம் அருகே சென்றபோது, எதிரே மதுரையைச் சேர்ந்த ஆசிர்வாதம் (68) என்பவர் ஓட்டி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ராம்குமாரின் முகம், மார்பு மற்றும் முழங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராம்குமாரின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஆசிர்வாதம் மீது விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!