Skip to content
Home » திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Senthil

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் பாஜ மாவட்ட தலைவர் தனபால் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், துரை மணிகண்டன் மீது கலவரத்தை தூண்டும்விதமாகவும், பொது வாழ்க்கையில் உள்ளவரை தரக்குறைவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாகவும் கூறி 153 (504 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாஜக நேற்று அறிவித்து இருந்தது. இதையடுத்து அந்த அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாஜ கட்சியினர் வருவதை  அறிந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் துரை மணிகண்டன் தலைமையில் காத்திருந்தனர். அப்போது பாஜ மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் வந்தபோது, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனாலும் சிலர் போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி கற்களை வீசினர். அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சியினரும் கற்களை வீசி அவர்களை தாக்கினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து அடிக்க முற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் காங்கிரஸ் கட்சியினர், பாஜவினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார்  இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 150 பேரை கைது செய்து தனித்தனி மண்டபங்களில் அடைத்தனர். காங்கிரஸ், பாஜ கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெரும் பரபரப்பு, பதற்றமும் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!