Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை… பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழக பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும் அடாவடித்தனமான அதிரடி பேச்சுகளால் ஊடக வெளிச்சம் பெற்று மிகப்பெரிய தலைவராக முடியும் என்று கனவு கண்டு செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளை சகித்துக் கொள்ளாமல் அவர்களை கேவலப்படுத்துவதோடு, களங்கப்படுத்துகிற அராஜக போக்கை கடைப்பிடித்து வருவதால் ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.  அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத அதிமுக, பாஜகவோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்குப் பிறகு அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது.  இந்நிலையில், திமுகவில் கொங்கு மண்டல தளபதியாக செயல்பட்டு கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக, பாஜக கோட்டை என்கிற மாயத் தோற்றத்தைத் தகர்த்தெறிந்து தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற கடும் பணியாற்றி காரணமாக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க அண்ணாமலையின் பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தீட்டிய சதித் திட்டம் தான் கைது நடவடிக்கை. அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 8 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அவசியமில்லாமல் மூக்கை நுழைத்து அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு 4 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவுடனேயே நெஞ்சு வலி ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுக்கக் கூட வாய்ப்பு தராமல் புழல் சிறையில் அடைப்பதில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியது. இதனால், கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு இதய நோயாளியான செந்தில் பாலாஜி கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகிற சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும், அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று வாதாடியதால் சென்னை உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போலக் காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.

இன்றைக்கு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சூழலில் இந்தியாவை ஆளுகிற பாஜக கட்சியின் தமிழக தலைவர், தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஒரு மாநில பாஜக தலைவர் கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும். இத்தகைய குற்றத்தை கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிற அண்ணாமலை செய்திருக்கிறார். இவருக்குச் சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோ இல்லையோ, தமிழக மக்கள் வருகிற  மக்களவை தேர்தலில்  தமிழக பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி இவ்வாறு அழகிரி தனதுஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!