ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமயக் குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தாமரைப்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்மலிங்கேஷ்வரர் சுவாமி ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக

நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தாமரைப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ

தர்மாம்பிகை அம்பாள் உடனுறை ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில்
3 ஆம் குலோத்துங்கன் பதவி ஏற்ற காலத்தில் கட்டப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் ஆகும். சமயக்குரவர்கள் மூவராலும் தேவார பாடல் பாடப்பட்ட புகழ்பெற்ற சிவத்தலமாகும்.
கி.பி. 1191 காலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் தான் பதவி ஏற்ற பதிமூன்றாம் ஆண்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு இதுவரை நான்கு முறை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஐந்தாம் முறையாக தற்பொழுது ஆன்மீக பெருமக்கள் கிராம மக்கள் நிதி உதவியுடன் ஸ்ரீ தர்மாம்பிகை உடனுறை ஸ்ரீ தர்ம லிங்கேஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 15 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற யாகசாலையின் இறுதியில் இன்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்மலிங்கேஷ்வரர் சுவாமி, ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாஹ கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அனைத்து விமானங்களுக்கும் பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பொழுது கூடியிருந்த திரளான பக்தர்கள் ஹர ஹர சிவா மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்த கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ தர்மாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்மலிங்கேஷ்வரர் சுவாமி, ஸ்ரீ மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு மலர்மாலைகளை அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
