கூட்டுறவு ஊழியர்களை தரக்குறைவாக பேசிய விவசாய சங்கத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி மீது சட்டபூர்வமான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்டப் பொருளாளர் தினேஷ்குமார், கௌரவத் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டுறவு சங்க ஊழியர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், கூட்டுறவு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஊழியர்கள் குறித்து அவதூறாகப் பேசுவோர் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
.
