Skip to content
Home » உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தாம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) , இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லாத இந்திய அணி அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் உத்வேகத்துடன் தயாராகிறது. பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா ஆகிய மூத்த வீரர்களைத் தான் அணி அதிகமாக நம்பி இருக்கிறது. இந்திய அணி 3 வேகம், 2 சுழல் அல்லது 4 வேகம், ஒரு சுழல் இவற்றை எதை தேர்வு செய்யும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இன்று காலையில் நிலவும் சூழல் மற்றும் ஆடுகளத்தன்மையை பார்த்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை இறுதி செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘இந்த டெஸ்டில் அஸ்வின் விளையாடமாட்டார் என்று நான் சொல்லமாட்டேன். ஆடுகளத்தை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் மாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. நாளை (இன்று) கூட இன்னும் சற்று வித்தியாசப்படலாம். அதனால் ஆடுகளத்தன்மையை இன்று பார்த்த பிறகே அணியை முடிவு செய்வோம். 15 வீரர்களையும் விளையாட தயாராக இருக்கும்படி கூறியிருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம் பெறுவார்கள். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டால், அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிட்டும். அனேகமாக ஆல்-ரவுண்டரான ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மற்றபடி முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் பந்துவீச்சுக்கு வலுசேர்க்கிறார்கள். கடந்த பிப்ரவரி- மார்ச் மாதம் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததால் திடமான நம்பிக்கையுடன் களம் காணுவார்கள்.

ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில்  வந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சவால்மிக்க அணியாக திகழ்கிறது. அந்த அணியில் பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், உஸ்மான் கவாஜா நல்ல பார்மில் உள்ளனர். அதே சமயம் அண்மை காலமாக தடுமாற்றத்திற்கு உள்ளான டேவிட் வார்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சு தான். கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், ஸ்காட் போலன்ட் மிரட்ட காத்திருக்கிறார்கள். காயத்தால் கடைசி நேரத்தில் ஹேசில்வுட் ஒதுங்கியது சற்று பின்னடைவு தான். ஆனால் இங்குள்ள சூழலில் ஆஸ்திரேலிய பவுலர்களின் கை ஓங்குவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருப்பதால் வரிந்து கட்டி நிற்பார்கள்.

மொத்தத்தில் இந்த கோப்பையை உச்சிமுகர்ந்து, ஐ.சி.சி. நடத்தும் 4 வகையான போட்டிகளிலும் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும் வேட்கையுடன் ஆஸ்திரேலியா யுக்திகளை தீட்டுகிறது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் களத்தில் ஆக்ரோஷத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் 32-ல் இந்தியாவும், 44-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 29 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி சமனில் (டை) முடிந்தது. பெரும்பாலும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களிலேயே டெஸ்ட் போட்டி நடக்கும். அப்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஆடுகளம் வறண்டு சுழற்பந்து வீச்சுக்கு கணிசமாக ஒத்துழைக்கும். ஆனால் முதல்முறையாக இப்போது ஜூன் மாதத்தில் அதுவும் தொடக்கத்திலேயே டெஸ்ட் போட்டி நடக்க இருப்பதால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பதில் குழப்பம் நிலவுகிறது. என்றாலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசம போட்டி அளிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!