Skip to content
Home » கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் பல்வேறு அலைகளாக பரவி மக்களை அச்சுறுத்தின. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்த பாதிப்பு முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. இதன்பின்னர், உலக நாடுகள் முழுமைக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனாவுக்கான தேசிய மருத்துவ பதிவகம் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் ஒரு பிரிவான இந்த அமைப்பு, கொரோனா பாதித்து, சிகிச்சை முடிந்து சென்ற நோயாளிகளிடையே ஓராண்டுக்கு பின்னர் நடைபெறும் மரணங்களுடன் தொடர்புடைய காரணிகளை மதிப்பீடு செய்தது.

இதன்படி, கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து சென்ற ஓராண்டு வரை அவர்களை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு கண்காணித்து வந்துள்ளனர். 2020 செப்டம்பரில் இருந்து 2023 பிப்ரவரி வரை தகவல்கள் சேகரிக்கப்பட்டன.அதில், கொரோனா பாதிப்புக்கு பின்னான மரணத்திற்கான முக்கிய காரணங்களில், ரத்தம் உறைதல் ஏற்பட்டு, களைப்பு மற்றும் மூட்டு வலிகளுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின்பு இருதய பாதிப்புகள் ஏற்படுவது மரணத்திற்கான முதல் காரணம். நுரையீரல் பாதிப்பு, அதனால் சுவாச செயலிழப்பு, பூஞ்சை பாதிப்புகளான மியூக்கர்மைகோசிஸ் உள்ளிட்ட சிக்கலான நிலைகளும் ஏற்படுகின்றன. நுரையீரல், சிறுநீரகம் ஆகியன முற்றிலும் செயலிழப்பதும் உயிரிழப்புக்கான காரணங்களாக உள்ளன. கண்காணிக்கப்பட்ட 14,419 நோயாளிகளில் 942 பேர் உயிரிழந்துள்ளனர். இது 6.5 சதவீதம் ஆகும். இவர்களில் 325 பேர் பெண்கள். 616 பேர் ஆண்கள்.

இவர்களில் 175 பேர் (18.6 சதவீதம்) 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். மித அளவில் இருந்து கடுமையான கொரோனா பாதிப்பு மற்றும் இணை நோய்கள் கொண்ட வரலாறை உடைய, 40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர்களிடையே இந்த மரண விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. மற்றும் இதே பாதிப்புகளை கொண்ட 18 முதல் 45 வயது உடையோருக்கும் இதே நடைமுறை காணப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டோர் ஓராண்டுக்குள் உயிரிழப்பது 1.7 மடங்கு அதிகம். ஓராண்டுக்குள் எந்த நேரத்திலும் உயிரிழப்பது 113 ஆக (1.4 சதவீதம்) உள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு, கொரோனாவுக்கு பின்னான மரணத்தில் இருந்து 60 சதவீத பாதுகாப்பு கிடைத்துள்ளது. உயிரிழப்பை தடுப்பதற்கான இந்த முதல் தடுப்பூசியின் திறனானது, 168 முதல் 185 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளது. எனினும், 86 சதவீதம் அளவுக்கு தொடர்ந்து திறம்பட செயல்பட்டது என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!