மனநல மறுவாழ்வு மையத்தில் “வளையளணி” விழா நடத்திய தம்பதியினர்: கோயில் மற்றும் மண்டபங்களில் நடத்துவதை விட, இங்கு நடத்தியது மன நிறைவளிப்பதாக நெகிழ்ச்சி.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் வேலா கருணை இல்லம் அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதித்தோரை பராமரித்து, மறுவாழ்வு அளிக்கும் மையமாகவும் செயல்பட்டு
வருகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 48 பேர் இந்த மனநல மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது வளையல் அணி விழாவை மனநலம் பாதித்தோர் முன்னிலையில் நடத்தியிருப்பது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் அம்பாபூர் ஊராட்சி, செங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்-ஜீவா தம்பதியினர். இன்று தங்களது உறவினர்களோடு விளாங்குடியில் உள்ள வேலா மனநல மறுவாழ்வு மையத்திற்கு வளையல் அணி விழாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து, அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டு மத்தியில் வைத்து வளையல் அணிக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.
குத்துவிளக்கேற்றி காப்பரிசி படையலிட்டு, வேப்பங்குச்சி வளையல் மற்றும் வெள்ளி கண்ணாடிகளால் ஆன வளையல்களை தாம்பூலத்தில் வைத்து வழிபட்ட பின்னர், நிறைமாத கர்ப்பிணியான ஜீவாவிற்கு வளையல் அணி விழாவினை நடத்த துவங்கினர்.
உறவினர்கள் மற்றும் மனநலம் பாதித்தோர் கைகளால் ஜீவாவிற்கு வளையலணிவிக்கப்பட்ட கையோடு, அவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர் ரஞ்சித் – ஜீவா தம்பதியினர்.
பின்னர் தங்கள் கைகளாலேயே மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அமரவைத்து, அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நிறைமாத கர்ப்பிணியான ஜீவாவிற்கும் ரஞ்சித்திற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து கணவர் ரஞ்சித் கூறுகையில்…
தங்கள் இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளை இதுபோன்று மனநல பாதித்த மக்கள் மத்தியில் கொண்டாடும்போது ஒருவித திருப்தி கிடைப்பதாகவும், செய்கின்ற செலவும் உபயமாக இருக்கும் அதேவேளையில் அவர்களது பூரண ஆசியும் தமக்கு கிடைக்க பெறுவதால் மகிழ்ச்சி அளிக்கிறது என பேட்டியளித்தார்.
ஊரார் முன்னிலையில் ஆடம்பரமாக நடக்க வேண்டிய வளையல் அணி விழாவை, மனநல மறுவாழ்வு மையத்தில் ஆத்ம திருப்தியோடு நடத்தி முடித்துள்ள ரஞ்சித்-ஜீவா தம்பதியினரின் செயல் பாராட்டுதலுக்குரியது.
