நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் கீரைக்கொல்லை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது கடல் அட்டைகள் சிக்கியது.
தலைமறைவாகியுள்ள வீட்டின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் இதில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும், கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்கும் முக்கியக் குற்றவாளிகளை அவர்கள் தப்பவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
பலமுறை கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், இந்த வருடத்தில் ஒரு முறை கூட அவற்றை கடத்திய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தப்பியோடிவிட்டதாக மட்டுமே வனத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தப்படும், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைக் கடத்தும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.
