Skip to content
Home » நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

  • by Senthil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம், பணப் பலன்கள் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோரி 2020-ல் ஞானபிரகாசம் மனு தாக்கல் செய்தார். செயல்படுத்தவில்லை.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் (தற்போது இவர் நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக உள்ளார்) மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவாநாந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் வழக்கில் கோர்ட் பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக இருந்த செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆண்டோ ஆகிய 3 பேருக்கும் இரண்டு வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் வருகிற 9-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரண் அடைய வேண்டும் என்று இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!