Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தை நோக்கி வரும் புயல்.. 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை நோக்கி வரும் புயல்.. 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை நோக்கி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று முதல் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 சென்டி மீட்டரை விட 4 சதவீதம் அதிகமாக, அதாவது 25.4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

இதனை தொடர்ந்தும் மழைக்கான சூழல் இருக்கிறது. அந்தவகையில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 12ம் தேதி (நாளை மறுதினம்) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வருகிற 15ம் தேதி இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலை கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ‘டெல்டா வெதர்மேன்’ ஹேமச்சந்தர் தெரிவித்தார். இந்த நிகழ்வு புயலாகவும் மாற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி பயணித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15ம் தேதியில் இருந்து மழைக்கான சூழல் தொடங்குகிறது. 20ம் தேதி வரை தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கும். புயலாக மாறும் பட்சத்தில் அது தமிழக பகுதிகளில் 19ம் தேதியோ, அதற்கடுத்த நாட்களிலோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!