தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடி சடலமாக மீட்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாந்தக்குடி கிராமத்தில் உள்ள கீற்று கொட்டகையில் தூக்கில் தொங்கியபடி, இளைஞர் மற்றும் சிறுமியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பார்த்திபன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிசிஆர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). கொத்தனார் வேலை செய்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இன்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் என 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் அடித்து கொலை செய்து தொங்கவிட்டது போல் இருப்பதால் ஆணவ கொலையா? என போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தங்களது மகனைப் பெண் வீட்டாரே அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பார்த்திபனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
