நாகை மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில் காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலனிதெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடி கொண்டு இருந்தனர்.

அப்போது மது போதையில், இருந்த காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடுவதை போட்டோ எடுத்து போலீசாருக்கு அனுப்புவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அது மோதலாக ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த 28 வயதான விஜயக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காலனி தெருவை சேர்ந்த சஞ்சய், விக்னேஷ்வரன் உள்ளிட்ட 3 பேர் நாகை, திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்து 8 பேர் கைது செய்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து இரு சமூகத்துக்கு இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நாகை அருகே இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.