திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள தூண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே மான்தோல் விற்பதாக மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பெயரில் அங்கு சென்ற தமிழ்நாடு வனவிலங்கு மற்றும் வனப்பகுதி குற்றத் தடுப்பு பிரிவு குழுவினர் மற்றும் மணப்பாறை வனச்சரக அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதில் மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு குழுவினர் மான்தோல் வாங்குவதை போல் பேரம் பேசி ஒரு தோல் ஒரு லட்ச ரூபாய் என்று கூறியதன் பேரில் இரண்டு தோள்களை வைத்திருந்த கேரளாவை சேர்ந்த ரமேஷ் (60) மற்றும் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த அழகர்(43) ஆகிய இருவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட பாலக்குறிச்சி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (60), கருமலையான் பட்டியைச் சேர்ந்த துரைசாமி (27) ஆகிய இருவரில் துரைச்சாமி தலைமறைவானார். பழனிச்சாமி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிடிபட்ட ரமேஷ், அழகர் இருவரையும் தொடர் விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து சுமார் 14 சந்தன கட்டைகள் வெட்டி விற்பதற்கு வைத்திருப்பதாக கூறிய நிலையில், அந்த சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்து மணப்பாறை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.இதில் பிடிபட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இரண்டு மான் தோல்கள் மற்றும் 14 சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
