Skip to content
Home » எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

அடுத்து ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தல் பரபரப்பாக அமையும். ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தினால், அது பா.ஜ.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் மையமாக இருக்க வேண்டுமா என்று கேட்கிறீர்கள். தேசிய அளவில் பா.ஜ.க. தவிர்த்து செயல்பட்டு வருகிற ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவின் சில பகுதிகளில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. உதாரணத்துக்கு எனது சொந்த மாநிலமான கேரளா மற்றும் தமிழ்நாட்டைக் கூற முடியும்.

காங்கிரஸ் கட்சிதான், தேசிய தடம் பதித்திருக்கிற, வரலாற்று மரபைக் கொண்டிருக்கிற, எல்லா இடங்களிலும் இருக்கிற ஒரே கட்சி என்பதில் சந்தேகத்துக்கு இடம் இல்லை. எனவே எதிர்க்கட்சி முன்னணி அல்லது எதிர்க்கட்சி அரசு என்றால் தவிர்க்க முடியாமல் அது காங்கிரஸ் கட்சியை மையப்படுத்திதான் இருக்கும்.

கடந்த 2 தேர்தல்களில், பா.ஜ.க. முறையே 31 மற்றும் 37 சதவீத ஒட்டுகள் வாங்கி வெற்றி பெற்றதில் இருந்து நாம் கண்ட பாடம், பிளவுபட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வின் கைகளில் சிக்குவதுதான் என்று நான் நினைக்கிறேன். எனவே எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது முக்கியமான விஷயம். அது பல்வேறு விதங்களில் அமையலாம். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக அமையலாம் அல்லது இடங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வதாக அமையலாம்.

இதனால் முடிந்தவரை, வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு எதிராக தெளிவான வெற்றியைப் பெற முடியும். மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இறுதி தீர்வுக்கு (பிரதமர் பதவி) விட்டு விடலாம். 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. உதாரணமாக, பீகாரில் பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் இப்போது எதிர்க்கட்சிகள் அணிக்கு வந்து விட்டது. நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலையும் தவிர்க்க முடியாதது. எனவே அடுத்த ஆண்டில் பா.ஜ.க. வீழ்ந்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!