கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழை ஆங்கிலத்தில் பெற விண்ணப்பித்த பொதுமக்கள், நீண்ட கால தாமதத்தால் கடும் அதிருப்தியடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் பாலிடெக்னிக் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், தனது மகனுக்கான பிறப்புச் சான்றிதழை ஆங்கிலத்தில் பெறுவதற்காக கரூர் மாநகராட்சியில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை பதிவு செய்திருந்தார்.
ஆனால், விண்ணப்பம் செய்தது முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரித்தபோதெல்லாம், “கணினி நெட்வொர்க் செயல்படவில்லை”, “சர்வர் பிரச்சினை உள்ளது”, “பின்னர் வாருங்கள்” என்று அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பியதாக கனகராஜ் குற்றம்சாட்டினார்.
இதேபோன்று பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் பிற பதிவுகள் தொடர்பாக வந்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்தும் உரிய பதில் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் அவர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், “அத்தியாவசிய ஆவணங்களைப் பெற மாதக்கணக்கில் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி சேர்க்கை, பாஸ்போர்ட், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பிறப்புச் சான்றிதழ் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால், தொடர்ந்து நெட்வொர்க் பிரச்சினை எனக் கூறி காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என வேதனை தெரிவித்தனர்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நெட்வொர்க் பிரச்சினை சரியானவுடன் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக நிலவி வரும் தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சேவைகளை வழங்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
