Skip to content
Home » டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

  • by Senthil

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.  ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய நிலக்கரை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!