Skip to content

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கலந்துகொள்ளவில்லை. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ்க்கு தகவல் தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எம்எல்ஏக்களுக்கு மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்ட நிலையில் எம்எல்ஏ இனிகோவுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. தன்னுடைய தொகுதி நிகழ்ச்சியில் தனக்கு தகவல் தெரிவிக்காமல் நிகழ்ச்சி நடத்தியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்டுபடுத்தியிருப்பதாக கூறி எம்எல்ஏ இனிகோ ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பிவிட்டதாக நேற்று மாலை பரபரப்பு தகவல் வௌியாகின.

இந்த தகவல் கிடைத்தவுடன் முதல்வர் இனிகோ இருதயராஜ்க்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டதாகவும், ராஜ்னாமா கடிதத்தை திரும்ப பெற அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்தும் நேருவுடன் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளை முதல்வர் கண்டித்ததாகவும் தகவல் வௌியாகியுள்ளது. மேலும் கிழக்கு சட்டமன்ற தொகுதி என்பது திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மகேஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொண்டது தொடர்பாக எம்எல்ஏ இனிகோவுக்கு தகவல் தெரிவிக்காததுபோலவே மாவட்ட செயலாளரான அமைச்சர் மகேஸ்-க்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

error: Content is protected !!