Skip to content
Home » டிஐஜி விஜயகுமார் தற்கொலை……..சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்…..

டிஐஜி விஜயகுமார் தற்கொலை……..சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்…..

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி பதவி ஏற்றவர் விஜயகுமார்.  தினமும் காலையில்  நடைபயிற்சி செல்லும் பழக்கம் கொண்டவர். வழக்கம் போல இன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து  நடைபயிற்சிக்கு கிளம்பினார்.  6.30 மணி அளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டு வாசலில்  பாதுகாப்பு பணியில் இருந்த மெய்க்காப்பாளர்  வைத்திருந்த துப்பாக்கியை  கேட்டு வாங்கினார். அதிகாரி கேட்கிறாரே என அவரும் கொடுத்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில்  விஜயகுமார்  துப்பாக்கியை நெற்றிக்கு நேரே வைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஒரே குண்டில் அந்த இடத்திலேயே அவர்  ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.  உடனடியாக உயிர் பிரிந்தது அதிர்ச்சி அடைந்த மெய்க்காப்பாளர்  டிஐஜியின் திடீர் முடிவு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

விஜயகுமார்,  எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை. உடனடியாக அவரது உடல்  கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உதவி போலீஸ் சூப்பிரெண்டாக பணியில்  சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்,  சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பெனிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை இவர் தான் விசாரித்தார்.  சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி  நேர்மையாக தனது கடமையை செய்தார் என மக்களிடம் பாராட்டு பெற்றவர்.

தற்கொலை செய்து கொண்ட டிஐஜி  விஜயகுமார்  திறமையான, அதிகாரி என பெயர் பெற்றவர். குற்றவழக்குகளில் துப்புதுலக்குவதில்  கைதேர்ந்தவர்.   இவர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி என்ற கிராமத்தை  சேர்ந்தவர். இவரது மனைவி  கீதா வாணி டாக்டர்.  இவர்களது மகள்இந்த ஆண்டு பிளஸ்2 முடித்துள்ளார். சென்னையில் கல்லூரியில் சேர்த்து உள்ளனர்.

விஜயகுமார் மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தில் ஒரு நல்ல அதிகாரியை  தமிழக காவல் துறை இழந்து விட்டது. அவரது குடும்பத்துக்கு  எனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.

தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:”டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை மிகவும் வருந்ததக்கது. அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.  மன உளைச்சல் இருந்த காரணத்தால் விஜயகுமாருக்கு,  ஐஜி  சுதாகர் கவுன்சிலிங் அளித்துள்ளார். நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கபப்ட்டுள்ளார். மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜயகுமார் எடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பிரச்சினை என்பதால் அதில்  போலீஸ் தலையிட முடியாது எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பகல் 12 மணி அளவில்  விஜயகுமார் உடல்  உடற்கூராய்வு முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  அமைச்சர்  சாமிநாதன், காவல்துறை கூடுதல்  இயக்குனர் அருண் மற்றும் ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்  விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.  விஜயகுமார் மறைவால்  அவரது  சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இறுதிச்சடங்கில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து  அணைக்கரைப்பட்டி கிராமம் செல்கிறார்.

நேரில் அஞ்சலி செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குர் அருண் கூறும்போது, அவர் மன அழுத்த்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதை அரசியல் ஆக்காதீர்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!