திருச்சி மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களிடமிருந்து நிலுவைத் தொகைகளை வசூலிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்களில் அதிக அளவில் நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 14வது வார்டு பெரிய சவுக் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடிநீர் இணைப்பு தொகை செலுத்தாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பை ஊழியர்கள் துண்டிப்பு செய்தனர். மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குத்தகைதாரர்கள், உரிய கடை வாடகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் உடனடியாகச் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேபோன்று, மாநகராட்சிக் கடைகளின் குத்தகைதாரர்கள் தங்களது வாடகை நிலுவைத் தொகைகளை உடனடியாகச் செலுத்தி சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
வரி மற்றும் வாடகை நிலுவைகளை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித சமரசமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ளும். என்பதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கடமையை உணர்ந்து உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தி, திருச்சி மாநகரின் வளர்ச்சிக்கும், தூய்மைக்கும், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு திருச்சிமாநகராட்சி ஆணையர் பொன்மணி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
